ஆளுங்கட்சியான திமுக கூட்டத்துக்கே காவல்துறையினர் நிபந்தனைகள் போடுகின்றனர் என்று கனிமொழி தெரிவித்தார். மேலும் கரூர் கூட்டத்தில் திமுக சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் நிபந்தனை எதுக்கு தெரியுமா?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ''காவல்துறையினர் நிபந்தனைகள் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பிரதமாரகவே இருந்தாலும் தனது கட்சி நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த கட்சி தான் பொறுப்பெற்றுக் கொள்ள வேண்டும். காவல்துறை பாதுகாப்பு தான் கொடுக்க முடியும். தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்த கட்சிகள் தான் செய்ய வேண்டும்.

பிரதமர், முதல்வருக்கும் நிபந்தனைகள் உண்டு

முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் நிபந்தனைகள் உண்டு. அண்மையில் கரூரில் திமுக நடத்திய முப்பெரும் விழாவுக்கும் காவல்துறையினர் நிபந்தனைகள் விதித்தனர். ஆளுங்கட்சி கூட்டங்கள் நடத்தினாலும் காவல்துறையின் நிபந்தனைகள் உண்டு. இந்த நிபந்தனைகள் யாரையும் அச்சுறுத்துவதற்காக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அவர்களின் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி தான் நிபந்தனைகள் போடப்படுகிறது.

யார் மீதும் பழி போடவில்லை.

தவெக கூட்டத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து காவல் அதிகாரிகளும் அங்கு இருந்துள்ளனர். 20 பேருக்கு ஒரு காவல் அதிகாரி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கூட்டத்துக்கு வரக்கூடிய மக்களை பாதுகாப்பது அந்தந்த கட்சிகளின் பொறுப்பாகும். நான் யார் மீதும் பழி போடவில்லை. நாங்கள் சதி செய்யவில்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்வர் இரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார்.

திமுக சதி செய்யவில்லை

எங்கள் கட்சியினர் அனைவரும் இங்கு தான் இருக்கின்றனர். சொந்த மக்கள் மீதே முதல்வர் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே இது தொடர்பாக வைக்கப்படும் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்லப் போவதில்லை'' என்றார்.