கள்ளக்குறிச்சி கலவரம்.. பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்..? விசாரணையில் பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலியான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியின் படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர்கள் மாணவி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியான முறையின் நடைபெற்ற போராட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்த கும்பல், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.
சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் பள்ளியை நோக்கி பேரணியாக வந்த போராட்டக்காரர்களை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருப்பினும் கலைந்து செல்லாத வன்முறையாளர்கள், காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். தொடந்து காலவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த உயர் நீதிமன்றம்
இதனையடுத்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிரடி படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைத்தனர். திடீரென்று வன்முறை நிகழ்ந்தது எப்படி..? பின்னணியில் இருப்பது யார்..? என்பது குறித்த புலன் விசாரணையை காவல்துறை தொடங்கியுள்ளது. மேலும் இதுவரை வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலியான தகவல்கள் மற்றும் வதந்திகல் பரப்பப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 32 வகையான யூடியூப் பக்கங்கள், சமூக வலைதளப் பக்கங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி எஸ்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்
பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் தவறான தகவல்களை பரப்பியவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி எஸ். பி பகலவன் எச்சரித்துள்ளார். இதனிடையே கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது எடுத்துச்சென்ற பொருட்கள் கும்பகொட்டா கோவில் அருகே குவிக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பி தருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், பொருட்கள் கும்பகொட்டா கோவில் அருகே குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கனியாமூர் பள்ளி அருகே கண்டெடுக்கப்பட்டதாக 14 ஜோடி தங்கத் தோடுகள் காவல்துறையினரிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளது.