கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த உயர் நீதிமன்றம்
பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் அமைதியாக தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாத கூறப்பட்டது. இந்தநிலையில் மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளியை முற்றிலுமாக போராட்டக்காரர்கள் சிதைத்துள்ளனர். இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக ஶ்ரீமதியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மாணவியின் உடலை பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த 9 நாட்களாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஶ்ரீமதியின் உடல் உள்ளது. இந்தநிலையில் மாணவி உடல் கூராய்வு தொடர்பாக நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம். மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தடையவியல் நிபுணர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் மீண்டும் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவக் குழுக்களே ஸ்ரீமதியின் உடலை மீண்டும் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. மாணவியின் தந்தை கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளபோது மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என மாணவியின் தந்தை தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மறுபிரேத பரிசோதனை மாணவின் பெற்றோர் இல்லாமல் நடந்துள்ளது, அதுகுறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை, எனவே தங்கள் தரப்பு மருத்துவ குழு மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த தமிழக அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு தவறாக வழிநடத்துகிறார், மேலும் மீண்டும் கலவரம் ஏதேனும் நடந்துவிடக்கூடாது என்பதில் அரசும், காவல்துறையும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். நீதிபதிகள் இந்த கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்திடமே வைக்கலாமே என தெரிவித்ததோடு, இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறினர்,
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுப்பட்டது. அப்போது நீதிபதி ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் அமைதியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என தடயவியல் நிபுணர் என தெரிவித்தனர்.
மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அனைவரும் தங்களை நீதிபதியாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களை நீதிபதி விமர்சித்தார்.