மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், தவெகவினர் பணமின்றி பெற்ற வெற்றிக்கு நேர்மையான உழைப்பால் நன்றி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். விமர்சனங்களைக் கண்டு துவளாமல், மக்கள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்றும், கட்சியை வலுப்படுத்த சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

தவெகவினர் காசு கொடுக்காமல் பெற்ற இந்த தூய்மையான வெற்றிக்கு, மக்கள் நலன் சார்ந்த நேர்மையான உழைப்பு மட்டுமே நீங்கள் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் விஜய் மற்றும் தவெகவினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்: அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக ஆழம் தெரிந்த ஜாம்பவான்களாக வலம் வந்தவர்களையே திகைக்க வைத்து, ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். எத்தனையோ அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்நாளில் போராடிப் பெற நினைக்கும் ஒரு மாபெரும் வெற்றியை, மக்கள் தங்களின் பேராதரவின் மூலம் த.வெ.க-வின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடக்கத்திலேயே பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். ​பண பலமோ, பாரம்பரிய அரசியல் பின்னணியோ இல்லாமல், காசு கொடுக்காமல் மக்கள் உங்களை இந்த அரியணையில் அமர வைத்திருக்கிறார்கள் என்றால், அது உங்கள் மீதும் உங்கள் தலைவர் தளபதி விஜய் அவர்கள் மீதும் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

​எடுத்தவுடனேயே யாரும் நூறு மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியாது. இது ஒரு புதிய தொடக்கம். சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர்கள், இப்பொழுதுதான் தங்களின் அரசியல் பாடத்தைக் கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் படிக்க வேண்டிய பாடங்களும், எழுத வேண்டிய பரீட்சைகளும் ஏராளமாக உள்ளன. ​பயிற்சி பெறுவதற்கு முன்பே வெற்றி கிடைத்துவிட்டது என்பதால், உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கிண்டலும், கேலியும், விமர்சனங்களும் கலந்தே இருக்கும். விமர்சனங்கள் என்ற உளியால் உங்களைச் செதுக்க நினைப்பவர்களுக்கு மத்தியில், நீங்கள் திண்டுக்கல் போல உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல், நேர்மையாகவும் உண்மையாகவும் மக்களுக்காக உழையுங்கள்.

​​தோல்விகளைக் கடந்துதான் பலரும் இந்த இடத்திற்கு வருவார்கள். ஆனால், உங்களுக்குத் தோல்விகளே இல்லாமல் நேரடியாகப் பிரம்மாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால், மெல்லக் கற்றுக்கொள்ளுங்கள்; எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எடுத்தவுடனேயே எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுவிட முடியாது. களத்தில் இறங்கி வேலை செய்யச் செய்ய, அனுபவம் கிடைக்கக் கிடைக்க, உங்களுக்கும் அரசியல் நுணுக்கங்கள் புரியத் தொடங்கும். ​தினமும் நாளிதழ்களைப் படிக்கத் தவறாதீர்கள். உலகிலும், தமிழகத்திலும், உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் தெரிந்து கொள்ளுங்கள்.

​​நீங்கள் சாதாரணமாய் இருந்தபோது உங்களோடு இருந்த நல் உள்ளங்கள், உங்களின் புதிய அதிகாரப் பதவிகளால் உங்களை விட்டு மெல்ல விலக்கப்படலாம் அல்லது அவர்களாகவே ஒதுங்கலாம். ​அதே நேரத்தில், உங்களைச் சுற்றிப் புதிய "அல்லக்கைகள்" (நல விரும்பிகள் போல் நடிக்கும் சுயநலவாதிகள்) சூழ்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ​நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களின் உண்மையான வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட நல்லவர்களை மட்டுமே எப்போதும் உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். ​

த.வெ.க மேலும் வலுவடையச் சில கூடுதல் ஆலோசனைகள்:

​​மக்கள் குறைதீர்க்கும் பிரத்யேகக் குழு: ஒவ்வொரு தொகுதிக்கும் த.வெ.க சார்பாக "மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மையம்" அமைத்து, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை (குடிநீர், சாலை, மின்சாரம்) உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கலாம். இது "இளைஞர்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல, செயல்வீரர்கள்" என்பதை நிரூபிக்கும். ​அரசியல் மற்றும் சட்டப் பயிற்சி முகாம்கள்: புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுதி வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு, சட்டமன்ற விதிமுறைகள், அரசுத் திட்டங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்த சிறப்புப் பயிற்சி முகாம்களைத் தலைவர் விஜய் அவர்கள் ஏற்பாடு செய்து தரலாம்.

​நேரடித் தொடர்பு & எளிய அணுகுமுறை: ஜாம்பவான்களிடம் மக்கள் வெறுத்ததே அவர்களின் "அணுக முடியாத" அதிகாரத் தோரணைதான். த.வெ.க-வினர் எப்போதுமே எளிய மக்களுடன் எளிதில் பழகக்கூடியவர்களாக, அவர்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் நல்ல நண்பர்களாகக் களத்தில் இருக்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்திற்கான நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியை தொடங்கி உங்களுடைய கொள்கைகளையும் செயல்களையும் மக்களிடம் கொண்டு சேருங்கள். நல்ல பிரிவுகளை தொடங்கி நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள். ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் கொடியேற்றுங்கள். தவெக கொடியில்லாத கிராமம் இல்லை என்று நிலையை உருவாக்குங்கள்.

மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். நீங்கள் காசு கொடுக்காமல் பெற்ற இந்த தூய்மையான வெற்றிக்கு, மக்கள் நலன் சார்ந்த நேர்மையான உழைப்பு மட்டுமே நீங்கள் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும். வாழ்த்துகளுடன், நல்லதொரு மாற்றத்தை நோக்கி முன்னேறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.