அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தனது வாழ்நாள் முழுவதும் அதிமுகவில் தான் இருப்பேன் என ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் யாரும் எதிர்பார்க்காதவிதமாக நேற்று தவெகவில் இணைந்தார். தவெகவில் அவருக்கு மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் என 2 பொறுப்புகளை விஜய் வழங்கியுள்ளார்.
தவெகவில் சேரும் ஜெயக்குமார்?
செங்கோட்டையனை போல் அதிமுகவில் இருந்து சில தலைவர் தவெக பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி மீது விரக்தியில் உள்ளதாகவும் அவர் தவெகவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து ஜெயக்குமார் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இறுதிமூச்சு வரை அதிமுக
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ''அண்ணன் செங்கோட்டையன் ஒரு முடிவெடுத்து தவெகவுக்கு சென்றுள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. நேற்று, இன்று, நாளை என எப்போதும் நான் அதிமுகவில் தான் இருப்பேன். இறுதிமூச்சு வரை அதிமுகவில் தான் தொடர்வேன். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டேன். ஆனால் என்னை பொறுத்தவரை அதிமுக என்னும் புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது. நான் எலி என யாரை சொல்கிறேன் என உங்களுக்கே தெரியும்.
பதவியை கொடுத்தது அதிமுக
புலிக்கு வாலாக இருப்பதை தான் நான் பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து ஒரு பயனும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அதிமுகவில் இருப்பேன். இதுதான் எனக்கு பெருமை. சபாநாயகர் அரியாசனம், அதன்பின்பு நிதியமைச்சர், அதன்பிறகு சட்டத்துறை அமைச்சர், ஐடி அமைச்சர், வனத்துறை அமைச்சர் என எனக்கு பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தது அதிமுக. கட்சியில் தலைமை நிலைய செயலாளர், மூன்று முறை மாவட்ட செயலாளர் என பல்வேறு பதவிகளை கொடுத்துள்ளது.
செங்கோட்டையன் சென்றதால் பின்னடைவு இல்லை
இந்த பெருமை வேறு யாருக்கு கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழ்பாடுவேனே தவிர, யார் வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டேன். செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இது தொண்டர்களின் இயக்கம். தலைவர்களின் இயக்கம் எல்ல'' என்று தெரிவித்துள்ளார்.


