விஜய் மீது பாஜக சாயம் பூசும் திருமா..! திமுகவை விட காழ்ப்புணர்ச்சி..! பதறும் பின்னணி..!
தவெகவில் செயல்பாடுகளை திமுகவைவிட திருமாவளவன் அதிகமாக விமர்சித்து வருகிறார். தவெகவை மட்டுமல்ல எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் பாஜக, சங்பரிவார் தலையீடு இருப்பதாக வதந்தி முத்திரை குத்தி வருகிறார்.

விஜய், தவெகவை தொடங்கியது முதலே பாஜகவை தனது கொள்கை எதிரி என அழுத்தமாக விமர்சித்து வருகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜகவை நேரடியாகவே கடுமையாக சாடியுள்ளார். ஆனால், திமுகவினரும், குறிப்பாத விசிக தலைவர் திருமாவளவன், ‘‘விஜயை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்றும், தவெகவில் சங்க பரிவார் அமைப்பினர் ஊடுருவி, சமூகநீதி அடிப்படையிலான அரசியலை புகுத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டி வருகிறார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் அரசியல் பலம் பெறுவதற்காக விஜய்யை பயன்படுத்த முயல்கிறார்கள் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு காரணம், தவெகவை தனியாக களமிறக்கி சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்கான முயற்சி என்றும் கூறிவருகிறார்.
இந்நிலையில், தவெகவில் சேங்கோட்டையன் இணைந்ததை விமர்சித்த திருமாவளவன், ‘‘விஜய் பாஜகவின் ஊடுருவலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘செங்கோட்டையன் எந்தப் பின்னணியில் தவெகவில் இணைந்தார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் நடக்கிற அரசியல் நகர்வுகளில் ஒவ்வொரு அங்குலத்திலும் பாரதிய ஜனதாவின் கைகள் உள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது. அதிமுகவில் இன்றைக்கு உள்ள இந்த குழப்பமான நிலைக்கு அல்லது விமர்சிக்கப்படும் நிலைக்கு பாஜகவும் ஒரு காரணம் என்பதை அதிமுக தலைவர்கள் உணருவார்கள் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டை குறிவைத்து பாஜக உள்ளிட்ட சங்பரிவார்கள் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் தனித்துவத்தோடு இயங்குகிறது என்கிற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களை மக்களிடையே பெற்றால் தான் தமிழ்நாட்டு மக்கள் அந்த கட்சியின் மீது ஒரு நம்பிக்கையை பெறுவார்கள். அவ்வாறு இல்லாமல் அது பாரதிய ஜனதாவோடு இணக்கமாக இருக்கிறது அல்லது நெருக்கமாக இருக்கிறது என்கிற தோற்றம் உருவானால் அவர்களுக்கு எந்த அளவுக்கு அது சாதகமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரையில் எதிராக தான் பார்ப்பார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அரசியல் பாஜகவோடு உறவு வைத்துக் கொள்வதை சீர்தூக்கி பார்க்கிற அணுகுமுறை. அது மக்களுக்கு எதிரானது என்று கருதுகிற ஒரு பார்வை தமிழக மக்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது.
அந்த வகையில் பார்க்கிறபோது பாஜகவோடு தவெக நெருக்கம் காட்டினால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் தான் சீர் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை முதன் முதலில் வரவேற்றவன் நான். ஆனால் அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பது என்னுடைய அவா. இப்போது நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கிற போது அவ்வாறு அவர் இயங்கவில்லையோ என்கிற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. எனக்கு மட்டுமல்ல, பொது மக்களிடையே அந்த சந்தேகத்தை எழுப்புகிறது. நல்லது, கெட்டதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பாஜகவோடு அவர் காட்டுகிற அணுகுமுறை கூட, அவருக்கு பயன் தருவதாக அமையாது என்பதே என்னுடைய கருத்து’’ எனத் தெரிவித்துள்ளார்.
தவெகவில் செயல்பாடுகளை திமுகவைவிட திருமாவளவன் அதிகமாக விமர்சித்து வருகிறார். தவெகவை மட்டுமல்ல எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் பாஜக, சங்பரிவார் தலையீடு இருப்பதாக வதந்தி முத்திரை குத்தி வருகிறார். திமுகவை, விசிகவை விமர்சித்து விமர்சிப்பவர்களையும், ஆர்.எஸ்.எஸ் இயக்குவதாக கூறி வருகிறார். காரணம், சிறுபான்மையினர் வாக்குகளும், ஆதரவும் அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம். குறிப்பாக சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் வாக்குகள் தவெகவுக்கு கணிசமாக செல்லும் எனக்கூறப்படுகிறது. விசிகவில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட திருமாவளவன் காழ்ப்புணர்ச்சியால் விஜயின் பின்னால் பாஜக இருப்பதாக வதந்தி பரப்பி வருகிறார்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
