- Home
- Politics
- விசுவாசம்னா என்னான்னு தெரியுமா..? எம்.ஜி.ஆர்- ஜெ.,வை மறக்காத செங்கோட்டையன்..! தவெக விரிக்கும் வலை..?
விசுவாசம்னா என்னான்னு தெரியுமா..? எம்.ஜி.ஆர்- ஜெ.,வை மறக்காத செங்கோட்டையன்..! தவெக விரிக்கும் வலை..?
மற்றொருபுறம், அ.தி.மு.க.வின் வாக்குகளை பெறுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம், கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இருப்பது போன்ற பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தவெகவில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில், தற்போது கட்சியில் அவருக்கு முக்கியப்பதவிகளை வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக, அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் பயணத்தை மேற்கொண்ட மூத்த தலைவராக திகழ்பவர் செங்கோட்டையன். அவர் அதிமுகவின் ‘சூப்பர் சீனியர்’ என்று அழைக்கப்பட்டவர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தாலும், தனது அரசியல் வேர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் சித்தாந்தங்களையும், நினைவுகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. அவரது அரசியல் வாழ்க்கை, விசுவாசத்தின் உதாரணமாகவே நிற்கிறது.
1971 வரை திமுகவில் இருந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது அவருடன் இணைந்தார். அவர் எம்.ஜி.ஆரின் மாணவன் என்று அழைக்கப்பட்டவர். 1977-ல், எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதல்வரானபோது, செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாகஎம்.எல்.ஏ. ஆனார். அதிமுக பொதுக்குழு கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக, எம்.ஜி.ஆர் தனது கையால் ‘பிளாங்க் செக் வழங்கியது அவரது விசுவாசத்தின் அடையாளம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரானபோது, செங்கோட்டையன் அவரது தீவிர விசுவாசியாக மாறினார். 1991-ல் ஜெயலலிதா முதல்வரானபோது செங்கோட்டையன் அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தியவர். இது அதிமுகவின் வரலாற்றில் பிரபலமான காட்சி. அவர் ஜெயலலிதாவின் அருகில் இருந்து, கட்சி அமைப்பு, தேர்தல் உத்திகள், அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றினார். பல தேர்தல்களில் வெற்றி பெற்று, உள்துறை, தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார்.
செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தம் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் மறைந்தபோதும் அவர்கள் மீது கொண்ட செங்கோட்டையனின் விசுவாசம் மறையவில்லை. அதிமுகவில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு விவசாயிகள் பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே பிரதானமாக இருந்தது. இதனால் மனவருத்தம் அடைந்த செங்கோட்டையன் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, "இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்தினேன்" என்று உருகினார். தவெகவில் இணைந்தபோதும் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். மெரினா கடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்கழக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
விஜயின் தேர்தல் உத்திகளை வகுக்கும் பொறுப்பில் இருந்தாலும், எம்.ஜி.ஆர் இமேஜை விஜய்க்கு பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி, தனது விசுவாசத்தை மறக்கவில்லை. செங்கோட்டையன் போன்ற தலைவர்கள், தமிழக அரசியலில் விசுவாசம் என்ற சொல்லின் அர்த்தத்தை ஆழப்பதிக்கிறார். அவர் தவெகவில் இணைண்ந்தாலும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் சமூக நீதி, ஏழை நலன் போன்ற சித்தாந்தங்களை பரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம், அ.தி.மு.க.வின் வாக்குகளை பெறுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
