தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அண்ணாமலை மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Enforcement Directorate raid on TASMAC : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்றிலுந்து சோதனை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை இரண்டாம் நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த பதிவில், தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

ED Raid on Tasmac | டாஸ்மாக் அலுவலகத்தில் ED ரெய்டு! கட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி!

தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே

கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, மு.க.ஸ்டாலின், ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு! என பதிவிட்டுள்ளார். 

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை

இதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவலகத்தில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இதுபோக, திமுகவினருடன் தொடர்புள்ள சாராய நிறுவனங்கள், பத்து ரூபாய் பாட்டில் புகழ் அமைச்சர் தியாகி பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் "கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்" தான் பதில்! விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டும் அமலாக்கத்துறை! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் சோதனை!

2026ஆம் ஆண்டு மக்கள் பதில் சொல்லுவார்கள்

மக்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை முடக்கி, மக்களை நேரடியாக பாதிக்கின்ற ஊழல்களின் ஊற்றிடமான திமுக-வின் ஆட்சியில், அதுவும், ஊழல் செய்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வருவதை "தியாகமாக" கருதும் இந்த "ஊழல் திலகங்களின்" ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?10 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள், மக்கள் நலத் திட்டங்களாக தமிழ்நாடெங்கும் மிளிர, 3 ஆண்டுகளில் திமுக ஆட்சி வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனோ, இத்தகைய ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! இவர்களுக்கான பதிலை 2026 களம் சொல்லும்! என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்