ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் திடீர் திருப்பம்.! களத்தில் இறங்கும் மத்திய உள்துறை
தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை என்ஐஏ போலீசார் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆளுநர் மாளிகை - பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. இந்த மாளிகை மீது கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மேலும் இரண்டு வெடிக்காத பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோம் தெரிவித்திருந்தார்.
யார் இந்த கருக்கா வினோத்
இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில் கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், இதற்கு முன்பு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கருக்கா வினோத்திற்கு மட்டுமே தொடர்பு உள்ளதாகவும், தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை தனியாக நடந்து வரும் வீடியோவையும் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டது.
என்ஐஏ போலீசார் விசாரணை
இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக என்ஐஏ போலீசார் ஏற்கனவே ஆளுநர் மாளிகை சென்று விசாரித்த நிலையில், தற்போது இந்த வழக்கு மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் என்ஐஏ போலீசார் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக போலீசார் என்ஐஏவிடம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்