பொங்கல் பரிசு ரூ.1000: முதல்வர் அறிவிப்பின் பின்னணியில் சின்னவர்!
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைத்ததன் பின்னணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பது தெரியவந்துள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அதிருப்தி எழுந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்தவகையில், நடப்பாண்டிலும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு கட்டுப்பாடு விதித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருந்ததற்கிடையே, நேற்றைய தினம் மாலையில் இந்த அறிவிப்பு வெளியானது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்க முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என்கிறார்கள்.
முதலில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு நடுவே மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் கனமழை என இரண்டு பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்திட தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லை. எனவே, நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து அனைவருக்கும் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா: ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்தது காங்கிரஸ்!
ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பொதுமக்களிடம் தென்பட்ட அதிருப்தியையும் உளவுத்துறை மூலமாக முதல்வர் அறிந்து கொண்டதாக கூறுகிறார்கள். அத்துடன், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் இந்த விவகாரம் அதில் பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் முதல்வருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கலாமா என அரசு ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தாராம்.
மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டியுள்ளதால், நிதி பற்றாக்குறை இருக்கிறது. இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை. அதற்காக பண்டிகை காலத்தில் பொதுமக்களை வஞ்சிப்பது முறையாக இருக்காது என சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என தனது கருத்தில் உறுதியாக இருந்து அழுத்தம் கொடுத்துள்ளார். அதனையடுத்தே, உடனடியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 என்ற அறிவிப்பு முதல்வரிடத்தில் இருந்து வெளியாகியுள்ளது என்கிறார்கள்.