Asianet News TamilAsianet News Tamil

ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா: ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்தது காங்கிரஸ்!

ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது

Congress leadership declines Ayodhya Ram Temple invite says its rss bjp event smp
Author
First Published Jan 10, 2024, 4:57 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

கும்பாபிஷேக விழாவுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளார். ஆனால், விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி முடிவெடுக்காமல் இருந்தது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது எனவும், கட்சி சார்ந்த மத விழாவாக அதனை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்  எனவும், மற்றொரு சாரார் விழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகின. இரண்டுமே தேர்தல் அரசியலை மனதில் வைத்துதான் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா: காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள்!

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

 

 

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த மாதம் அழைப்பிதழ் வந்துள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கானவர்களால் கடவுள் ராமர் வழிபடப்படுகிறார். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் அயோத்தி ராமர் கோயிலுக்கு அரசியல் சாயம் பூசி வருகின்றனர். முழுமையடையாத கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைத்தது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்த பார்க்கின்றனர்.” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்.”  எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios