சென்னையில் உள்ள மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி என்ற அந்த ஊழியர் சமீபத்தில் தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சென்னை எப்போது பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்று மீனம்பாக்கம் மேம்பாலம். இந்த மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த பாலாஜி தாகூ. இவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் பணிக்கு ஜிஎஸ்டி சாலை வழியாக பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். இன்று காலை 9 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் திடீரென பைக்கை ஒரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் 40 அடி உயரத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பாலாஜி குதித்துள்ளார்.
மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை
இதில் பாலாஜியின் தலை, முகம், இடுப்பு ஆகிய பகுதிகளை எலும்பு முறிவு ஏற்பட்டது மட்டுமல்லாமல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீனம்பாக்கம் போலீசார் உடனே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலாஜியை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி தான் தனியார் ஐடி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பணிச்சுமையா? குடும்ப பிரச்சினையா?
இந்த சம்பவம் தொடர வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? இல்லை குடும்ப பிரச்சினையா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
