பயணிகளே அலர்ட் !! மெட்ரோவில் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டாம்.. 20% தள்ளுபடி.. அறிமுகமான புதிய வசதி..
சென்னை மெட்ரோ ரயிலில் செல்வதற்கு டிக்கெட் வாங்க இனி வரிசைகளில் நிற்க தேவையில்லை, QR மட்டும் போதும் என்ற புதிய நடைமுறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், "இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே" என்ற புத்தம் புதிய முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீட்டை மட்டும் ஸ்கேன் செய்தால் போதுமானது.
இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மூலம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு வழங்கும் பக்கத்திற்கு செல்லலாம். இந்த பக்கத்தில், பபணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ ரயில் நிலையத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க:ஆவினில் இனி தண்ணீர் பாட்டில் தயாரிப்பு.. பால் பாக்கேட்டுகளில் சினிமா விளம்பரங்கள்.. அமைச்சர் சொன்ன தகவல்
யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு கட்டணத்தைச் செலுத்தலாம். ஆண்ட்ராய்டு கைப்பேசியில் யுபிஐ முறையை தேர்வு செய்தால், கைப்பேசியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து யுபிஐ செயலிகளும் வரிசைப்படுத்தப்படும். பயணிகள் இவற்றிலிருந்து ஏதேனும் ஒரு முறையை தேர்வு செய்து தொடர்வதற்கு பாதுகாப்பு கடவுச்சொல்லை மட்டும் உள்ளிட வேண்டும்.
QR டிக்கெட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு கைப்பேசி சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படும். தற்போது மொபைல் QR டிக்கெட்டில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு எப்போதும் சிறந்த மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டமானது இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.. "Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை