Asianet News TamilAsianet News Tamil

சிலிண்டர் முன்பதிவில் இந்தி: சரி செய்த இண்டேன் - சு.வெங்கடேசன் எம்.பி அலர்ட்!

விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

Indane cylinder said hindi imposition mistake has been corrected and expressing regret after Su Venkatesan letter smp
Author
First Published Nov 5, 2023, 2:28 PM IST

பாஜக ஆட்சியில் தொழில்நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான் என சாடியுள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம் என தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு முன்பதிவில் மாநில மொழிகள் நீக்கப்பட்டு இந்தி மட்டும் இடம்பெற்றிருந்தது தொடர்பான மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதத்துக்கு வருத்தம் தெரிவித்து அந்த தவறு சரி செய்யப்பட்டு விட்டதாக இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இண்டேன் சமையல் எரிவாயு பதிவுக்கான ஐ.வி.ஆர்.எஸ் இணைப்பில் இருந்த மாநில மொழிகள் தொடர்புக்கான தெரிவு நீக்கப்பட்டு இருந்தது. தொடர்பு கொண்டால் இந்தி மொழி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. சாமானிய மக்கள் வீட்டில் சோறு பொங்க இந்தி கற்றுக் கொண்டா வர முடியும்? இது அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன். 

இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைமை பொது மேலாளர் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் “தற்போது இப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

கிரிமினல் வழக்கு தொடுக்க பாஜக திட்டம்: மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு!

“இந்தியன்ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) – 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். 

இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வுக் காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியில் தொழில்நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். எப்படியோ இன்னொரு இந்தித் தடங்கல் நீங்கியுள்ளது என்பது மகிழ்ச்சிதான். விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios