தமிழ்நாட்டு மக்கள் மத வேறுபாடு பார்ப்பதில்லை: மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டு மக்கள் மத வேறுபாடு பார்ப்பதில்லை என மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை என்றாலே சட்டென நினைவுக்கு வருவது இரண்டு பெயர்கள்தான். ஒருவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றொருவர் மருத்துவர் கஃபீல் கான்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு 63 பச்சிளம் குழந்தைகள் உள்பட 80 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் அப்போது புதிதாக அமைந்த பாஜக அரசின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த அரசுக்கு முக்கிய பிரச்சினையாக அமைந்தது. யோகி ஆதித்யநாத் சொந்த தொகுதிதான் கோரக்பூர்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், தனது சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி சில குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகின. பலிகடா ஆக்கப்பட்ட கஃபீல் கான், சுமார் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்திய குழு, கஃபீல் கான் அலட்சியமாக செயல்படவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்றைய இரவு தன்னால் இயன்றவரை தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளின் உயிரை காப்பாற்ற போராடினார் என தெரிவித்தது. இதோடு, கஃபீல் கான் பிரச்சினை ஓயவில்லை. 2019ஆம் ஆண்டில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்தார். அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டில் அவரது சகோதரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் கோபம் அவரை விடாமல் துரத்தியது. இதனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக அவர் பணியாற்றி வருகிறார்.
The Gorakhpur Hospital Tragedy: A Doctor’s Memory of a Deadly Medical Crisis என்ற பெயரில் தனது உண்மை அனுபவத்தை புத்தகமாக கஃபீல் கான் எழுதியுள்ளார். அதில், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம், கோரக்பூர் மருத்துவமனை துயர சம்பவம்: ஒரு மருத்துவரின் நினைவுகள் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் ஏற்கனவே அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என மாறுகிறதா? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா?
தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் கடந்த சனிக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் குழந்தைகளுக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தான தனது வருத்தத்தை கஃபீல் கான் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் வசிப்பது பற்றி தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டில் நான் கண்ட வித்தியாசம் என்னவென்றால், இங்குள்ள மக்கள் மிகவும் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு கடவுளின் படம் இருந்தாலும், அவர்கள் மத சார்ந்து பாகுபாடு காட்டுவதில்லை. மதம் ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்று அவர்கள் நினைக்கிறார்கள், எனவே அவர்கள் இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என்று பாகுபாடு காட்டுவதில்லை.” என்றார்.
“தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஒரு வருடத்தில், நான் ஒரு 'முஸ்லீம்' மருத்துவர் என்று உணர்ந்ததில்லை. இங்கு நான் Dr. கஃபீல் கான், ஒரு குழந்தை மருத்துவர். அவ்வளவே. இது ஒரு வித்தியாசமான அனுபவம். இங்கு எனக்கு எவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைத்தது என்பதை என்னால் விளக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டு மருத்துவமனை மெஸ்ஸில் ஒரே டேபிளில் சைவம் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். எனக்கு முன்னால் நீங்கள் இறைச்சி சாப்பிடக்கூடாது என்று யாரும் கூறவில்லை. மக்கள் கல்வியை அணுகுவதால் இந்த வேறுபாடு உள்ளது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், இங்கு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.” என்றார் நெகிழ்ச்சியுடன்.
உத்திரப்பிரதேசத்துக்கு மீண்டும் செல்வது குறித்து பேசிய அவர், “உத்திரப் பிரதேசம் எனது சொந்த மாநிலம், கோரக்பூர் எனது பிறப்பிடம். ஆனால், என் குடும்பத்தினர் பயத்தில் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.