Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என மாறுகிறதா? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா?

இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Will parliament special session pass bill to change name india to bharat smp
Author
First Published Sep 5, 2023, 2:49 PM IST

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு சர்ச்சையாகியுள்ளதற்கிடையே, “பாரத்” பெயர் மாற்றம் பூதாகரமாகியுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டிஆர் பாலு கூறுகையில், “நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை. பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது.” என்றார்.

பாரதம் பெயரில் காங்கிரஸுக்கு என்ன பிரச்சினை? ராஜீவ் சந்திரசேகர் கேள்வி!

ஜி20 அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேசமயம், பாஜகவினர் இதற்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios