உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்ததா.?மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதற்கட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகைகையொட்டி வருகிற 10 தேதியே வங்கி கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. சுமார் 55லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. பல இடங்களில் இந்த திட்டத்திற்கு குடும்ப தலைவிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் தங்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையென புகாரும் தெரிவிக்கப்பட்டது.
விடுபட்டவர்களுக்கு குறுஞ்செய்தி
இதன் காரணமாக விடுபட்டவர்கள் முறையீடு செய்ய தமிழக அரசு சார்பாக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதற்கட்டத்தில் விடுபவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வரும் 10ம் தேதி முதல் விடுபட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்