ஜெயலலிதா பற்றிய தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத்தான் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அதிமுவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஸ் ஆகிய இரு அணிகளுமே அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைவர்கள் பலரும் அண்ணாமலையை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். அரசியல் அனுபவமில்லாதவர் என எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் கருத்தும் பாஜகவின் கருத்தும் ஒன்றுதான் என பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்ப்பதா? நாடகமாடும் செந்தில் பாலாஜி! இறங்கி அடிக்கும் அண்ணாமலை!

இந்த நிலையில், ஜெயலலிதா பற்றிய தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதா பற்றிய என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டனர். என்னுடைய பேட்டியில் நீதிமன்ற நடவடிக்கையைத்தான் கூறினேன். அதிமுகவின் தரம் தாழ்ந்த கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நாளிதழுக்கு நான் கொடுத்த பேட்டியில் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். அதில் தவறேதும் இல்லை.

கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற அண்ணாமலை, “கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது” என்றும் தெரிவித்துள்ளார்.