தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய போதிலும், வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கடந்த மூன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெயில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அந்த அளவுக்கு கொளுத்தி வருகிறது.
நேற்று பல்வேறு சதம் அடித்த வெயில்
நேற்று பல்வேறு பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவாகி இருந்தது. அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.04 டிகிரி, கடலூர் 100.4 டிகிரி, ஈரோடு 101.48 டிகிரி, தூத்துக்குடி 100.04 டிகிரி, வேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவாகி இருந்தது.
4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்ப நிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று அதிகபட்ச வெப்பநிலை உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் 1-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், இதர வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று வடக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர தெற்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கோவா-கர்நாடகா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
