உதயநிதி ஸ்டாலினை இழிவாக பேசியதாக இந்து முன்னணி மகேஷ் கைது!
உதயநிதி ஸ்டாலினை இழிவாக பேசியதாக இந்து முன்னணியை சேர்ந்த மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய இந்து முன்ணனி மகேஷ் உதயநிதி ஸ்டாலினை இழிவாக பேசியதாக தெரிகிறது.
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட தாமரை வடிவ நீரூற்று!
இதுகுறித்து ஆரணி திமுக நகர செயலாளர் ஏசி மணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆரணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இந்து முன்ணனி மகேஷை இன்று அதிகாலையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இந்து மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை திருவண்ணாமலையில் எரிக்க முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.