கரூர் சம்பவத்தில் நீதிபதியை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி வரதராஜனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். இதில் பெண்கள், குழந்தைகள் பெரும்பாலானோர் உயிரிழந்தது தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதலில் விசாரணைக்கு வந்திருந்தது.

தவெகவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் தவெகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதாவது ''தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய்யும், தவெக நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் உதவி செய்யாமல் தலைமறைவாகி விட்டனர். என்ன மாதிரியான கட்சி இது'' என்று நீதிபதி செந்தில் குமார் செந்தில் குமார் கூறியதுக்கு விமர்சனங்கள் வந்தன.

முன்னாள் காவல் அதிகாரி கைது

தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் நீதிபதியை அவரின் குடும்ப பின்னணியை வைத்து தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனம் செய்தனர். இதேபோல் நீதிபதி செந்தில்குமாரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நேதாஜி மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் வரதராஜன் கைதான நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் கேட்டு மனு

அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்காக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனது மனுவில் வரதராஜன் கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து வரதராஜனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, 2 வாரங்களுக்கு குற்றப்பிரிவு காவல் துறை முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார். மேலும் அவர் பேசிய சர்ர்சைக்குரிய வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டார்.