- Home
- Tamil Nadu News
- என்னை மன்னித்து விடுங்கள்.. பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்.. கரூர் செல்லாததற்கு விளக்கம்!
என்னை மன்னித்து விடுங்கள்.. பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்.. கரூர் செல்லாததற்கு விளக்கம்!
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தான் ஏன் கரூர் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கி கூறியுள்ளார்.

கரூர் தவெக கூட்ட நெரிசல்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனடியாக சென்னை திரும்பியதும், கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாததும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன்பின்பு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு விஜய் சென்னையின் இருந்தபடி வீடியோ காலில் ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்
இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்படவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வந்து அவர்களுக்கு விஜய் இன்று ஆறுதல் கூறினார். மாமலப்புரத்தில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டலில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது அவர்களிடம் கண்ணீர் மல்க பேசிய விஜய், ''உங்கள் அனைவரையும் சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் நிச்சயம் கரூர் வந்து உங்களை சந்திப்பேன். வாழ்நாள் முழுவதும் குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன்'' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து உதவியும் செய்வதாக உறுதி
மேலும் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. விஜய் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து அவர் ஆறுதல் தெரிவித்தது பெரும் விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
கரூர் செல்லாதது ஏன்? விஜய் விளக்கம்
கரூர் வருவதில் விஜய்க்கு என்ன பிரச்சனை? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தான் கரூர் செல்லாதது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது கரூரில் மண்டம் ஏதும் கிடைக்கவில்லை. போலீஸ் அனுமதி உள்ளிட்ட சிக்கல் காரணமாக தான் நேரில் வர முடியவில்லை என விஜய் அவர்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.