மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் மழை? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
Tamilnadu Rain Update: வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதாவது முன்கூட்டியே தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், எங்கு பார்த்தாலும் கடல் போல வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகின.
இதனால், மழை எனற அறிவிப்பை கேட்டாலே பொதுமக்கள் பீதி அடையும் அளவுக்கு இருந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் கனமழை இருக்குமா அல்லது மிதமான மழை இருக்குமா என்பது குறித்து வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எத்தனை பொது விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதேபோல் 30ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் 4 நாட்களுக்கு! தமிழக அரசு அறிவிப்பு!
மேலும் புத்தாண்டு தினத்தில் மழை எப்படி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் 03ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.