வெளுத்து வாங்கும் கனமழை: “27 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு” பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கல் பகுதியில் புதன் கிழமை உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை
மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழையானது நேற்று மாலை முதல் பல மாவட்டங்களில் கனமழையாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
அதன்படி திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சேலம், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 மணி வரை மழை
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உட்பட 27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.