தமிழகத்தை ரவுண்ட் கட்டப்போகும் மழை.! எந்தெந்த மாவட்டம்? சென்னையின் நிலவரம் என்ன?
Rain: மழைக்கான வாய்ப்புகள் உள் மாவட்டப் பகுதி முழுவதும் பரவியிருப்பதால், குறிப்பிட்ட ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் துல்லியமாகக் கணித்துக் கூறுவது கடினம் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியவதில்லை. இந்நிலையில் மார்ச் 20 வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.
உள் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
ஜெர் ஸ்ட்ரீமில் (Jet Stream) ஏற்படும் வளைவு காரணமாக, மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காற்று மண்டல அமைப்பில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தின் காரணமாக, இன்று தமிழ்நாட்டின் பல உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைக்கான வாய்ப்புகள் உள் மாவட்டப் பகுதி முழுவதும் பரவியிருப்பதால், குறிப்பிட்ட ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் துல்லியமாகக் கணித்துக் கூறுவது கடினம். பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த அதிகாலைப் பொழுதில் இம்மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் சென்னை வானிலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் மார்ச் 20 கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கூடிய கனமழை
மேலும் மார்ச் 21 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 22 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

