தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - சென்னை காவல்துறை விளக்கம்!

தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது

Greater Chennai Police explain about Restrictions on sticking stickers on private vehicles smp

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்களை பொருத்த தடை விதிக்கப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம்.

இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒருசில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற எழுத்து, முத்திரை, சின்னம் போன்றவற்றை வாகனத்தில் இருந்து நீக்க மே 1ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை நான் தான் கொடுத்தேன்: ஓட்டுநர் பரபரப்பு தகவல்!

இந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில், ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். அரசு அங்கீகாரம் பொற்ற அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500,  இரண்டாவது தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இதுபோன்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios