பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை நான் தான் கொடுத்தேன்: ஓட்டுநர் பரபரப்பு தகவல்!
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை பாஜகவிடம் நான் தான் கொடுத்தேன் என அவரது முன்னாள் ஓட்டுநர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. தேவகவுடாவின் மகனான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன்தான் இந்த பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதனிடையே, பாஜக கூட்டணி கட்சியான மதசார்பற்ர ஜனதாதள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக அம்மாநில டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.
இந்த வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக மாநில பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா டெல்லி தலைமையை முன்னரே எச்சரித்துள்ளார். அதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கி எதிர்ப்பு ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி!
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவ் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், இதேபோன்றதொரு பென் ட்ரைவ் காங்கிரஸ் வசமிடமும் உள்ளது. தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாய்ப்பளித்தால் அந்த வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடும் என பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த விவகாரத்தில் பெண்கள் மீது காங்கிரஸுக்கு அக்கறை இல்லை எனவும், தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் வீடியோக்களை வெளியிட்டதாகவும் பாஜக, மதசார்பற்ர ஜனதாதளம் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தகவல்களை அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்ட ஆனையை நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வாங்கி வைத்திக்கும் விவரங்கள் வெளியாகின என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அதேபோல், பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோவை ஒப்படைத்தவர்தான் காங்கிரஸிடமும் ஒப்படைத்தார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவை நான்தான் கொடுத்தேன். 15 ஆண்டாக பிரஜ்வல் ரேவவண்ணாவின் குடும்ப ஓட்டுநராக இருந்து, ஓராண்டுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டேன். பிரஜ்வல் தரப்பில் எனது நிலத்தை எழுதி வாங்கி என் மனைவியை தாக்கி சித்தரவை செய்தனர். நானும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். நியாயம் கிடைக்காத நிலையில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் வீடியோவை கொடுத்தேன். காங்கிரசாரிடம் தரவில்லை. விசாரணைக் குழு முன் ஆஜராகி நடந்தவற்றை தெரிவிக்க தயார்.” என தெரிவித்துள்ளார்.