Annamalai: இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியேறலாம்: அண்ணாமலை!!
தமிழக அரசு ஆளுநர் ரவியை ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் கையொப்பமிட கட்டாயப்படுத்தக் கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என். ரவி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல தரப்பினரும் கோரி வருகின்றனர். அதன்படி தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இயற்றி, சட்டப்பேரவையில் அதனை நிறைவேற்றியது.
பின்னர் இந்த மசோதா ஆளுநர் ஆர். என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக இந்த மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் தற்போது அந்த மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார். மசோதாவில் மீண்டும் சில திருத்தங்கள் செய்து அனுப்பும்படி ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மியை பாஜக வன்மையாக எதிர்க்கிறது என்றும் கூறினார். மேலும், "மசோதாவில் உள்ள குறைகளைத் தமிழக அரசு திருத்தவேண்டும் என்பதற்காகவே ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பி இருப்பார். யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆளுநரை மசோதாவில் கையெழுத்து போட கட்டாயப்படுத்தக் கூடாது" என்று தெரிவித்தார்.
ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்! வண்ணம் பூசிய இளைஞரை தீ வைத்துக் கொல்ல முயற்சி!
மேலும், குறையுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினால் பின்னர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காகவே ஆளுநர் ஆர். என். ரவி மசோதாவை திரும்ப அனுப்பியுள்ளார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
முன்னதாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலை மேடை ஏறியதும் போடியத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றினார். மகளிர் நிகழ்ச்சியில் தனது படம் வேண்டாம் என்பதற்காக அதனை அகற்றியதாக தனது உரையில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பெண்களின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அண்ணாமலை, "சாதனைப் பெண் என்றால் மூன்று மடங்கு அவர்களுக்கு கஷ்டம் வரும். ஆனால், முடியாது என்று ஒன்றும் இல்லை." என்று கூறினார். பிரதமர் மோடியை உருவாக்கியது அவரது தாய்தான் என்று்ம அவர் கூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறுகையில், ''ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிடவில்லை. யாரும் யாரையும் கம்பேர் பண்ணவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மையும் இருக்கிறது. சில அரசியல் கட்சிகளில் மேனேஜர் இருக்கின்றனர். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கின்றனர். டெபாசிட் போனாலும் ஜெயலலிதா துணிந்து நின்று தேர்தலில் ஜெயித்தார்கள். தலைவர் எப்படி இருப்பார் என்பதற்கான உவமை தான் அது. இந்த அரசியலில் காம்பர்மைஸ் பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை. என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறேன். பாஜகவின் காலம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன்.
நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை. எனது தாய், மனைவி ஜெயலலிதாவை விட மேலானவர்கள். அவதூறு வழக்குகள் போடாமல் இருக்கும் தலைவர் நான் மட்டும் தான். மக்கள் மன்றத்தில் கருத்துகளை சொல்லட்டும் , அவர்கள் முடிவு எடுக்கட்டும்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜக நிலைப்பாடு. ஆளுநர் சில கேள்விகள், சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானமாக கொடுத்தால் அதற்கு ஆளுநர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும். இது சட்டம். யாரையோ சமாதானப்படுத்த ஆளுநரை கையெழுத்திட நிர்பந்தம் செய்யாதீர்கள். 234 எம்எல்ஏக்களும் மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஆளுநர் சும்மா திருப்பி அனுப்ப மாட்டார். எதாவது விளக்கம் கேட்டு இருப்பார். தமிழக அரசும், சபாநாயகரும் ஆளுநர் எழுப்பி இருக்கும் கருத்தை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள அதை வெளியிட வேண்டும்.
பாஜக ஐடி விங்க் என்பது உணர்வுபூர்வமாக வேலை செய்யும் இடம். பாஜகவின் அங்கமாக இல்லாதவர்தான் பாதி பேர் இந்த ஐடி விங்க் வேலையை செய்கின்றனர். இன்னும் ஒரு ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியே செல்லலாம். பெரிய பெரிய தலைகள் இங்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. நாளை ஒரு எம்எல்ஏ வந்தால் கூட பாஜக இன்னொரு இடைதேர்தல் வேண்டுமா என யோசிக்கும். புதிய ஆட்களை சேர்ப்பது அகில இந்திய கட்சிக்கு பெரிய விஷயமல்ல. தமிழகத்திற்கு என்ன பயன் என்று யோசித்து செய்கிறோம்'' என்றார்.
ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அரசின் சட்ட மசோதா... மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!