Government Employee: தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காப்பீடு, கல்விக் கடன் சலுகைகள், குறைந்த வாடகை வீடுகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சூப்பர் திட்டங்களை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21,866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40,000 பணியிடங்களை நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதை நிறைவு செய்யும் வகையில், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 110 கோடி ரூபாய் செலவில், இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் 190 'C' வகை குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 14 வயது பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி! பட்ஜெட்டில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம்!

மக்கள் நலத்திட்டங்களை நாட்டிலேயே மிகச் சிறப்பாக நிறைவேற்றிட அயராது உழைத்து வரும் அரசு அலுவலர்கள் நலனைக் காப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அரசு அலுவலர்கள் தங்களது ஊதியக் கணக்கைப் பராமரித்து வரும் தமிழ்நாட்டின் முக்கிய வங்கிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கட்டணமின்றிப் பல சலுகைகளை அளித்திட முன்வந்துள்ளன. 

* அரசு அலுவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.

* விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வங்கிகள் வழங்கிடும்.

* விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் வழங்கிடும். 

* அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வங்கிகள் வழங்கிடும். 

* மேலும், தனிநபர் வங்கிக் கடன். வீட்டுக் கடன் கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன. 

இதையும் படிங்க: இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது! தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

அரசு அலுவலர்களுக்கு இந்தக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வழங்கிட முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், குறித்த காலத்திற்குள் இப்பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்குக் கிடைத்திடுவதை தமிழ்நாடு அரசின் கருவூலத் துறை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.