பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணிக்கு திடீர் நெஞ்சுவலி மற்றும் முதுகுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

GK Mani admitted to hospital : தமிழக அரசியலில் முக்கிய தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி, பாமகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிவர், பாமக தலைவராக பொறுப்பு வகித்தவர், பாமக சார்பாக பல முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். பாமக தலைவர் பதவியை அன்புமணிக்காக விட்டுக்கொடுத்தவர், தற்போது பாமகவில் கௌரவ தலைவராக உள்ளார்.

ராமதாஸ்- அன்புமணி மோதல்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. தந்தை - மகன் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில் கட்சியானது இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். அதிலும் பாமக மூத்த தலைவராக உள்ள ஜி.கே.மணி இருதரப்பையும் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அன்புமணி- ராமதாஸ் மோதலுக்கு காரணமே ஜி.கே.மணி தான் என விமர்சிக்கப்பட்டது. இந்த கருத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜி.கே.மணி மன வேதனையடைந்தார்.

மருத்துவமனையில் ஜி.கே.மணி

தனது ஆதங்கத்தையும் செய்தியாளர்களிடமும் கொட்டி தீர்த்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராமதாஸ் தலைமையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாசுக்கு ஆதரவாக ஜி.கே.மணி கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜி.கே.மணியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.