தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி தடகளம் வில்வித்தை சைக்கிளிங் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும், வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் காசோலைகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்கங்கள் வென்ற தடகள வீரர்கள் ஜ.கோகுலபாண்டியன், வீ.நவீன்குமார் மற்றும் வீராங்கனைகள் ஜா.சுஜி, கா.யாமினி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் 1.35 லட்சத்திற்கான காசோலைகளையும், வில்வித்தை வீரர்கள் ப.சதீஷ்குமார் மற்றும் ர.பிரித்தீஸ்வரன் ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

மேலும் பிப்ரவரி 2026ல் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்வதற்காக பாரா சைக்ளிங் வீரர் பி.பிரதீப் செலவீன தொகையாக 2,50,000 ரூபாய்க்கான காசோலையையும், ஆசிய ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்வதற்காக சைக்ளிங் வீரர் ர.சஞ்சய் அவர்களுக்கு செலவீன தொகையாக 2,00,000 ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.