திருவாரூர் மாவட்டம் கீழ்குடி பகுதியில் புத்தாற்றில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு நான்கு பேரையும் சடலமாக மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீழ்குடி பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு பாய்ந்து வருகிறது. இந்த ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினாலும் கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி தடுப்பணை பகுதியில் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு நான்கு நபர்கள் இந்த புத்தாற்றில் குளித்துள்ளனர். சிறிது நேரத்தில் ஆற்றில் குளித்த நான்கு திடீரென நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

4 பேர் நீரில் மூழ்கி பலி

அதற்குள் அவர்கள் ஆற்றில் அந்த நபர்கள் மூழ்கிய நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நன்னிலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் ஒரு மணி நேரம் தேடிய நிலையில் 4 நபர்களையும் சடலமாக மீட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களது உடல்கள் நன்னிலம் போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்னிலம் போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குளிக்க சென்றதால் இந்த இளைஞர்கள் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சோகத்தில் மூழ்கிய அப்பகுதி மக்கள்

விசாரைணயில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன், ஜெயக்குமார், மணிகண்டன் என்பதும் முதல் கட்டளை பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் மணிகண்டன் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் நான்கு நபர்கள் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.