Indirakumari passed away : முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்! அதிமுக டூ திமுக அரசியல் பயணம் என்ன?
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய புலவர் இந்திரகுமாரி, ஜெயலலிதா ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திமுகவில் இருக்கும் இந்திரகுமாரி உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். அவரது் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாஜி அமைச்சர் மறைவு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரகுமாரி நேற்று (ஏப்ரல்.15) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் எம்ஜிஆருடன் அரசியல் பயணத்தை தொடங்கிய இந்திரகுமாரி கடைசியில் திமுகவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார். வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற இந்திரகுமாரியின் வாழ்க்கை பயணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை பூர்வீகமாக கொண்ட இந்திரகுமாரிக்கு சினிமாவில் பாடலாசிரியராக வர வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. இதற்காக வாய்ப்பு தேடி வந்தவருக்கு இலக்கிய பேச்சாற்றல் கை கொடுத்தது. புலவர் இந்திரகுமாரியின் பேச்சு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போக, அவரை அதிமுக பிரச்சாரத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கினார். தொடர்ந்து மேடைப்பேச்சில் கலக்கிய இந்திரகுமாரிக்கு 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி தொகுதியில் சீட் கொடுத்தார். அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதிமுக. தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு இந்திரகுமாரிக்கு சமூக நலத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
வழக்கில் சிக்கிய இந்திரகுமாரி
இந்த ஆட்சி கால கட்டத்தில் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டார். கடந்த 1991 - 1996 அதிமுக ஆட்சியின்போது இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசக் காலணி வழங்கியதில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அடுத்து மீண்டும் ஒரு வழக்கில் சிக்கினார். காது கேளாதோர் பள்ளியும், மாற்றுத்திறனாளி பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி, அரசுப் பணத்தில் ரூ.15.45 லட்சம் மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு அழைய வேண்டிய சூழல் உருவான நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். திமுகவில் இவர் இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகியும் முக்கியப் பதவிகளையும் தலைமை கொடுக்கவில்லை.
அதிமுக டூ திமுக
இந்தநிலையில் தான் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் இந்திரகுமாரிக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதால் சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார். இந்த சூழ்நிலையில் அரசியல களத்தில் இருந்து சற்று விலகி இருந்தாலும் அவ்வப்போது திமுக கூட்டங்களில் கலந்து கொள்வார். இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி புலவர் இந்திரகுமாரி காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.