பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜேஸ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்: மலேசியாவில் கோர விபத்து - 10 பேர் பலி!
இதையடுத்து, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ராஜேஸ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து விட்டது. சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனவும் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், அவர் உடனடியாக காவல் நிலையத்தில் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.