அதிமுகவில் இணையவில்லை: திமுக தலைமைக் கழக நிர்வாகி ஆஸ்டின் மறுப்பு!
அதிமுகவில் தான் இணையவில்லை என முன்னாள் எம்.பி.யும், திமுக தலைமை கழக துணை அமைப்புச் செயலாளருமான ஆஸ்டின் மறுப்பு தெரிவித்துள்ளார்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இதையடுத்து, அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைந்தனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும், அதிமுகவில் இருந்து பிரிந்து மாற்றுக் கட்சிக்கு சென்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் பொருட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசிலியான் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் உடனிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் எம்.பி.யும், திமுக தலைமை கழக துணை அமைப்புச் செயலாளருமான ஆஸ்டின் அதிமுகவில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் மாற்றுக் கட்சியில் இணைந்ததாக யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஒளிப்பரப்படும் பொய்யான செய்திகளுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொய்யான செய்தியை வெளியிட்டு,என் பெயருக்கு களங்கம் விளைவித்து சுயலாபம் அடைவோர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
புழல் சிறையில் 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை: ஜாமீன் மனுவில் அமர்பிரசாத் ரெட்டி தகவல்!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ்டின் 1992ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 2001ஆம் ஆண்டில் திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அதிமுக கட்சி சார்பில் நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், திருநாவுக்கரசர் கட்சியை கலைத்து விட்டு பாஜகவுக்கு சென்றதால் ஆஸ்டின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, தேமுதிகவுக்கு சென்ற அவருக்கு, மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி, திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆஸ்டின், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தளவாய் சுந்தரத்திடம் தோல்வியைத் தழுவினார்.
இந்த சூழலில், அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.