புழல் சிறையில் 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை: ஜாமீன் மனுவில் அமர்பிரசாத் ரெட்டி தகவல்!
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அமர்பிரசாத் ரெட்டி தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்ட விவகாரத்தில், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவருமான உள்ள அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டியை மேலும் மூன்று வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய புகாரிலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும், தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சியின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதில், செஸ் ஒலிம்பியாட், தென்காசி வழக்குகளில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், மற்ற இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை - மத்திய அரசு!
அந்த மனுவில், “2000 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட வேண்டிய இடத்தில், 2910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 500 பேருக்கு ஒரு சமையலறை என்று இல்லாமல் மொத்தமாகவே ஒரே ஒரு சமையலறை மட்டுமே உள்ளது. 10 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விதியை மீறி 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை உள்ளது. அதனைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் தன்னை அரசியலில் இருந்தே விலக சொல்லி மிரட்டுகிறார்கள் எனவும் அமர்பிரசாத் ரெட்டி தனது ஜாமீன் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நிதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது, அதனையேற்று, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.