நாட்டுக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்போல செந்தில் பாலாஜியை திமுகவினர் சித்தரிப்பதாக சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்
சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். அதிகாலையில் செந்தில் பாலாஜியை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் பாஜக வின் அமலாக்கத்துறை அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், கைது செய்யப்பட்ட ஒருவரை முதல்வர் சந்திப்பதா என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான விமர்சனம்: கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - அண்ணாமலை!
இந்த நிலையில், நாட்டுக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்போல செந்தில் பாலாஜியை திமுகவினர் சித்தரிப்பதாக சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உதயநிதி ஸ்டாலின், சபரீசன் விரைந்து சென்று ஏன் சந்திக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் ஓடோடி போய் பார்க்கிறார். சபரீசன் ஓடோடி போய் பார்க்கிறார். உதயநிதியாவது அமைச்சர். சபரீசன் ஏன் சென்று சந்திக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜி இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தினுடைய வருவாயை, ஆயிரக்கணக்கான கோடி பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய சிவி சண்முகம், “அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது வருமான வரித்துறை பெண் அதிகாரியை தாக்கியுள்ளனர். இதனை நான் சொல்லவில்லை. ‘என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு என்னைத் தாக்கினார்கள்’ என அந்த அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் தலைவர்கள் கூட்டணி தலைவர்கள் அன்று வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட போது எங்கே சென்றார்கள்? பெண் அதிகாரி தாக்கப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தனர். காது குத்தும் விழாவா அது சோதனைக்கு வரும்போது சொல்லி விட்டு வருவதற்கு” என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
