தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதி

தமிழக - கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடத்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஏழு நாட்களில் 15 அடி வரை உயர்ந்து 129.85 கன அடியாக உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 6,125 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1,400 கன அடியாக இருக்கிறது

வெள்ளப்பெருக்கு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்படுவதால் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக வீரபாண்டி முல்லை பெரியாற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க பேரிக்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது

ஆற்றில் இறங்கி குளிக்கவோ வேண்டாம்

மேலும் நாளை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தண்ணீர் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் பெரியாற்றங்கரையோரம் செல்லவோ ஆற்றில் இறங்கி குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணி துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் தடையை மீறி வீரபாண்டி ஆற்றுப்பகுதிக்குச் சென்று செல்பி எடுத்தும் குளித்தும் வருகின்றனர்.