கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மாரடைப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மாரடைப்பு

வதந்தி பரப்பினார் எனக்கூறி சென்னை மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை காவல் துறையினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

பெலிக்ஸ் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

முன்னதாக பெலிக்ஸ் ஜெரால்டு கைதுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிமுக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியியிடப்பட்டுள்ள பதிவில், ''பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

சிறை தான் பரிசு

ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல. தற்போது கரூர் துயரத்தில் திமுக அரசு மீது மக்கள் எழுப்பும் சந்தேகங்களை வெளிப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.மக்களிடையே நிலவும் குழப்பங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது பத்திரிகையாளர் கடமை. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

விடுதலை செய்ய வேண்டும்

மாறாக, பாசிசப் போக்குடன், கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை கைது செய்வது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்கள் தான் இன்னும் அரசியல் சந்தேகங்களை மக்களிடையே வலுப்பெறச் செய்யும். பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.