கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் பேசிய பேச்சில் தொண்டர்களை தூண்டிவிடும் தொனி தெரிகிறதாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். விஜய் இதை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனே சென்னை கிளம்பி சென்றதாக பல்வேறு தரபினரும் குற்றம்சாட்டினார்கள். இதன்பிறகு சென்னை சென்ற விஜய் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் இருந்தார். இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து விஜய் 3 நாட்களுக்கு பிறகு இன்று வாய் திறந்து பேசினார்.
உருக்கமாக பேசிய விஜய்
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசிய விஜய், '''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது. எனது மனம் முழுவதும் வலி மட்டும் தான். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு சென்றோம். ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது'' என்றார்.
என்னை பழிவாங்குங்கள் சிஎம் சார்
தொடர்ந்து இந்த சம்பவத்தில் தமிழக அரசு மீது குற்றம்சாட்டிய விஜய், ''சிஎம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை பழிவாங்குங்கள். மக்களை ஏதும் செய்யாதீர்கள். நாங்கள் அனுமதி கொடுத்த இடத்தில் பிரசாரம் செய்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. வேறு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று தான் நான் உடனே மருத்துவமனை செல்லவில்லை'' என்றார்.
விஜய் மீது திமுகவினர் குற்றச்சாட்டு
முடிவில் தனக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், நண்பர்களே.. தோழர்களே எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்'' என்று தெரிவித்தார். விஜய்க்கு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ''விஜய் தனது தவறுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே திமுக மீது பழி போடுகிறார். அவரை பாஜக தூண்டி விடுகிறது'' என்று தெரிவித்தனர்.
தொண்டர்களை தூண்டி விடும் விஜய்
இந்நிலையில், விஜய் பேச்சில் தொண்டர்களை தூண்டிவிடும் தொனி தெரிகிறது என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ''விஜய் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். ஆனால் முதல்வரை அவர் விமர்சனம் செய்தது இந்த நேரத்தில் தேவையில்லாதது. இது மொத்த சூழலையும் மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது. விஜய் 100% இதை அரசியலாக மாற்றுகிறார். விஜய் முதல்வர் மீது விமர்சனம் வைப்பது தவெக தொண்டர்களை தூண்டி விடும் செயலாகும். இது தவறான முன்னுதாரணம்.
விஜய் அரசியலாக்க கூடாது
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தவெக சிபிஐ விசாரணை கேட்கிறது. இப்படி இருக்கும்போது விஜய் முதல்வர் மீது நேரடியாக எப்படி விமர்சனம் வைக்க முடியும்? இந்த விவகாரத்தை சாந்தப்படுத்த தான் விஜய் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதை விட்டு அரசியல் செய்வதை விஜய் தவிர்த்து இருக்கலாம். தன் மீதான குற்றசாட்டுகளுக்கு விஜய் விளக்கம் அளிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. இது கூட பிரச்சனை இல்லை. ஆனால் அவர் இந்த விவகாரத்தை அரசியலாக்கியது தான் தவறு'' என்று தெரிவித்தார்.
