பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரையும், தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மயில்சாமி மரணம்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு மயில்சாமி வழிபட சென்றிருந்துள்ளார். இன்று அதிகாலை வழிபாடுகளை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது வழியில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருப்பவர்களிடம் நெஞ்சு வலிப்பதாக மயில்சாமி கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே மயில்சாமி சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மயில்சாமி உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 1985-ம் ஆண்டு வெளியான கன்னிராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் மயில்சாமி. இதையடுத்து ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு, விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்களில் காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்துள்ளன.
இதையும் படியுங்கள்... தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர்.. நந்தமுரி தாரக ரத்னா மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
இவர் சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மயில்சாமி, காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, அதிமுக-வில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
ஜெயலலிதாவின் மறைவு வரை அதிமுகவில் இருந்த அவர், அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். மயில்சாமிக்கு அருமைநாயகம் என்கிற மகனும் உள்ளார். இவரும் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அதிர்ச்சி... ஹன்சிகா வேகமாக வளர்வதற்க்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரின் தாயார்? பரபரப்பு தகவல்!
