Asianet News TamilAsianet News Tamil

கோவை கார் வெடிப்பு விவகாரம்... உயிரிழந்தவர் வீட்டில் வெடிமருந்துகள்... டிஜிபி அதிர்ச்சி தகவல்!!

கோவை கார் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

explosives seized in house of person who died in coimbatore car blast says tn dgp
Author
First Published Oct 23, 2022, 11:50 PM IST

கோவை கார் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவையில் இன்று காலை கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். பின்னர் இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில், கார் சென்னை பதிவெண்ணை கொண்டு இருந்ததும் கார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் குறைந்த அழுத்தம் கொண்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடாதீர்கள்... திமுகவை விளாசும் அண்ணாமலை!!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது  வீட்டை சோதனை செய்தபோது குறைந்த அழுத்தம் கொண்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டு உள்ளிட்ட வெடி மருந்து பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளதுள்ளது. தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்ததில் காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து வந்த கார் 9 பேர் கைமாறி தற்போது பத்தாவது நபரிடம் இருந்துள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது. வேறு சில  சம்பவம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு அவரிடம் தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள போதும் உயிரிழந்த நபர் மீது ஏற்கனவே எந்த  வழக்குகளும் பதியவில்லை.

இதையும் படிங்க: திமுக அரசின் அலட்சியமே இளம் பத்திரிக்கையாளர் இறப்பிற்கு காரணம்... சசிகலா குற்றச்சாட்டு!!

அவருடைய செல்போன் தரவுகளை ஆராய்ந்து யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால் அவர் ஒதுங்கி உள்ளார். அப்போது தான் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை. மேலும் உயிரிழந்த நபர் எந்த அமைப்பின் பின்னணியிலும் இல்லை. தனிநபராக செயல்பட்டாரா அல்லது வேறு திட்டங்கள் ஏதும் இருந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல்துறையே துரிதமாக செயல்பட்டு வருவதால் என்.ஐ.ஏ விசாரணை தேவையில்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios