Asianet News TamilAsianet News Tamil

மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடாதீர்கள்... திமுகவை விளாசும் அண்ணாமலை!!

கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் என்றும் இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

annamalai slams dmk that dont become a threat to the people
Author
First Published Oct 23, 2022, 11:03 PM IST

கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் என்றும் இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை கோவை நகரில் உக்கடத்தில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததாக செய்தி அனைவரும் கண்டிருப்பீர்கள். இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தங்களது முதல் கட்ட விசாரணையை துவங்கினார்கள். இது ஒரு விபத்து, குண்டு வெடிப்பு என்று எண்ண வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் இதுவரை சொல்லவில்லை.

ஆனால் கோவை நகரில் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காரில் ஏற்றி வரப்பட்ட சிலிண்டர் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை விசாரிப்பதற்கு 6 தனிப்படையின் அவசியம் என்ன? திறனற்ற திமுக ஆட்சியில் பதவியேற்ற நாள் முதல் மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவிவருகிறது. கடந்த 15 மாதங்களில் பட்டப் பகலில் குண்டு வீச்சு சம்பவங்கள், நடு ரோட்டில் படுகொலைகள் போன்றவற்றை நாம் பலமுறை பார்த்ததால் கோவையில் இன்று காலை நடந்ததை சிலிண்டர் விபத்தாகக் கருதி எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது கூட பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை அமைப்பது யார்? பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - முந்துவது யார் ?

இது தான் திமுக ஆட்சியில் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்திற்குக் கிடைத்த பாதுகாப்பு. கடந்த ஒரு மாதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை நமது மத்திய அரசு தடை செய்த பின் தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கட்சி அலுவலகம், கடை, வீடுகளைக் குறி வைத்து 19 இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. திமுக ஆட்சியில் குண்டு வெடிப்புகள் புதிதல்ல. 1998 ஆம் ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 58 பேர் பரிதாபமாக உயிரிழந்ததைக் கோவை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இன்று மீண்டும் அதே பதட்டத்தில் பண்டிகை நாளன்றும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் நம் மக்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வரும் நம்மைக் காக்க இந்த திறனற்ற திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால்தான் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் சிறையில் இல்லாமல் வீதியில் நடமாடி வருகிறார்கள். இன்றைக்கு நடந்த சம்பவம் மக்கள் நடமாடும் நேரத்தில் நடந்திருந்தால் எப்பேர்ப்பட்ட உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். இறைவன் அருளால் மட்டுமே மக்கள் இன்று பிழைத்துக்கொண்டனர். இன்று காலை கார் சிலிண்டர் வெடித்து உயிர் இழந்தவரின் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகாமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜமேசா முபீன் என்பவராகும்.

இதையும் படிங்க: திமுகவின் உட்கட்சிப் பிரச்னை நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது... ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!!

காவல்துறை வட்டாரங்களில் கார் வந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபின் வேகத்தடையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து குண்டுவெடிப்பு ஏற்படுத்தவதற்கு எடுத்துச்செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவும், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் குண்டு வெடிப்பையே சுட்டிக்காட்டுவதாக பேசப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை இந்த திறனற்ற திமுக அரசு எப்போது ஒப்புக்கொள்ளும்? கோவையில் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவம். இதை சொல்வதற்கு தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? தேசவிரோத தீவிரவாத கும்பல் இப்படிப்பட்ட சதிதிட்டத்தை தீட்டி பண்டிகை நாளன்று ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் குண்டு வெடிக்கவைத்து உயிரை கொள்ளும் வரை உளவுத்துறை உறங்கிக் கொண்டிருந்ததா? குறைந்தபட்ச பாதுகாப்பு கூட வழங்க முடியவில்லையெனில் தமிழக காவல்துறையால் மக்களுக்கு என்ன பயன்? உளவுத்துறை என்ற பிரிவு தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளது.

இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் உளவுத்துறையின் தோல்வியின் வெளிப்பாடு. முதல்வர் தன்னை சுயபரிசோதனைக்கு உள்ளக்கிக் கொள்ளவேண்டும். தனது தலைமையிலான இந்த அரசின் திறனற்ற தன்மையால் மக்களுக்கு ஏற்படும் தொடர் அச்சுறுத்தலுக்கு பின்னரும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? திறனற்ற திமுக அரசு மக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடாதீர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை தயவுதாட்சனையின்றி கைது செய்யவேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios