நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு "ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை வீழ்த்தி தமிழகத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின், 'பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது. நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது' என்று கூறியிருந்தார்.

திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்

இந்த நிலையில், திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் மு.க.ஸ்டாலின் பார்த்து அலறிப் போய் விட்டார் போல. உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார். "அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்" என்பார்கள்.

அதிமுக அரசு திட்டங்களை கேட்டுப் பெறும்

ஆனால், நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு "ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.

ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்

"மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே?" என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா? இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

இனி தமிழ்நாடு ஏமாறாது

தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #FraudModel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது! குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம்.

நமது வெற்றி உறுதியானது

மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி! எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தொடக்கம் தான்... Lot more to come! மாண்புமிகு அம்மா அவர்கள் கூறுவது போல், நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி உறுதியானது! நாளை நமதே'' என்று தெரிவித்துள்ளார்.