திருப்பரங்குன்றம் சுற்றுப்பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என எச்சரித்தார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் கருத்து பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஏழைகளை விமர்சனம் செய்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்று கடுமையாக சாடியுள்ளார். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது:
மதுரை மாநகராட்சி ஊழல்:
"மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலுக்காக, மேயரின் கணவரை கைது செய்துள்ளார்கள். மேயர் இந்திராணியைக் காப்பாற்றவே அவரது கணவரை கைது செய்துள்ளனர். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இதுபற்றி முழுமையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை வைக்கப்படும்.
குடிநீர் வரி, வீட்டு வரி, குப்பை வரி என எல்லாவற்றிலும் வரி போட்டு, அதில் இப்போது ₹200 கோடி ஊழல் செய்துள்ளது தி.மு.க. அரசு. இன்று தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. 6,000 மதுக்கடைகளில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு ₹10 அதிகமாக வைத்து, ஒரு நாளைக்கு ₹15 கோடியும், ஆண்டுக்கு ₹5,000 கோடியும் ஊழல் செய்கிறார்கள்.
டி.ஆர்.பி. ராஜாவுக்குக் கண்டனம்:
முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது வெளிநாடு சென்றுள்ளார். 'இப்போதாவது சைக்கிள் ஓட்டாமல், தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்' என ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தோம்.
நான் வெள்ளை அறிக்கை கேட்டால், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, 'நான் வெளிநாடு சென்று வெள்ளி ஸ்பூனில் சாப்பிட்டதே பெரிய சாதனை' என்கிறார். ஆமாம், நான் ஒரு விவசாயி. எனக்கு அது சாதனைதான். உங்கள் அப்பா மத்திய அமைச்சராக இருந்தவர். நீங்கள் தங்க ஸ்பூனில் சாப்பிடுவீர்கள். நாங்கள் கையால்தான் சாப்பிடுவோம். எவ்வளவு திமிரு இருந்தால் அவர் இப்படிப் பேசுவார். இப்படி ஏழைகளை விமர்சித்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட்கூட கிடைக்காது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் டி.ஜி.பி. கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அதற்கான பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு தி.மு.க. அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பதவிக்குக் கூட உரிய நேரத்தில் ஒருவரை இவர்களால் நியமிக்க முடியவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பதவிக்கு கொண்டு வருகிறார்கள். இப்படி காவல்துறையில் பணிகளை நிரப்பினால், எப்படி சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும்? ராணுவம் நாட்டை காப்பது போல, காவல்துறை மக்களைக் காக்க வேண்டும்," என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
