கொலோன் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட தமிழ்த் துறையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டதற்கு அண்ணாமலை விமர்சனம். ஸ்டாலினின் செயலை 'போன் ஒயர் பிஞ்சு' நகைச்சுவைக்கு ஒப்பிட்டு அண்ணாமலை கிண்டல்.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட தமிழ்த் துறையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டதாகக் கூறுவது, 'போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்ற நகைச்சுவைக் காட்சிக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
"பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு! அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை பதிலடி
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதிவுக்குப் பதிலளித்து அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
சூரியன் திரைப்படத்தில், கவுண்டமணி அவர்களின், 'போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்ற நகைச்சுவைக் காட்சி மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் இந்த நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
