கோவை, திருப்பூர் மக்களின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இத்திட்டத்தை ஜெயலலிதா ஆலோசனை செய்ததாகவும், தான் முதல்வரான பின் விரைவுபடுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்

கோவை, திருப்பூர் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம் அத்திக்கடவு- அவிநாசி திட்டம், இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனையடுத்து இந்த திட்டமானது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழாவானது கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இத்திட்டத்தை பற்றி ஆலோசனை நடத்தி நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் துருதிஷ்டவசமாக அவர் மறைந்து விட்டதாக கூறினார்.

என்னை அடிமைப்படுத்த முடியாது

இதனையடுத்து தான் முதல்வரானதை தொடர்ந்து அத்திகடவு அவிநாசி திட்டம் விரைவுப்படுத்தப்பட்டதாக கூறினார். இதற்காக போராடிய விவசாயிகள் கனவை நனவாக்கிய அரசு அ.தி.மு.க அரசு தான் என தெரிவித்தார். நான் எப்போதுமே இருக்கிறது சூழலுக்கு தக்கவாறு நடந்து கொள்கின்றவன் என்றவர், என்னை எவனாலும் அடிமைப்படுத்த முடியாது. பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை சில பேர் கொண்டுவர எந்த முயற்சியிம் செய்யாமல், தற்போது திறந்து வைத்தவர்களும் சிலர் இங்கே இருக்கிறார்கள் என விமர்சித்தார்.

அதிமுக ஆட்சி கால திட்டங்கள்

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரபட்ட தடுப்பணைகளை தி.மு.க அரசு கிடப்பில் போட்டு உள்ளது என்றும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைப்பது தொடர்பாக மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் போது ஆராய்ந்து அந்த குளங்கள் இணைக்கபடும் என்றார். அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை அனைத்தையும் முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.ஸ்மார்ட் சிட்டித் திட்டம், கோவை கூட்டு குடிநீர் திட்டம், திருப்பூரில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததாக கூறியவர், ஒரு மருத்துவ கல்லூரியை இந்த ஆட்சியில் கொண்டு வந்து உள்ளார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

தி.மு.க ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு எதாவது ஒரு திட்டங்களையாவது கொண்டு வந்தார்களா ? எனக் கேள்வி எழுப்பியவர், அ.தி.மு.க கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்த அரசாங்கம் இந்த அரசு என விமர்சி்தார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நாம் கட்டி வைத்த திட்டங்கள், கட்டிடங்களுக்கெல்லாம் கருணாநிதி பெயரை வைத்து திமுக அரசு திறந்து வைக்கிறார்கள் என கூறினார். யார் கட்டிய பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது ? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.