டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: இதெல்லாம் வேலைக்கு ஆகாது - மதுப்பிரியர்கள் யோசனை!
டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.
டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
இருப்பினும், குவாட்டர் ஒன்றுக்கு ரூ.10 அதிகமாக கொடுக்க வேண்டும் என்பது டாஸ்மாக் கடைகளில் எழுதப்படாத விதியாகவே உள்ளது. இதுதொடர்பாக, எவ்வளவோ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், எத்தனையோ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து யாரேனும் கேள்வி கேட்டால், அவர்களை டாஸ்மாக் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும் வாடிக்கையாக உள்ளது, அண்மையில் கூட, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை போலீஸ் ஒருவரே தாக்கிய வீடியோ வைரலானது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்கப்படும் பணம் மேல்மட்ட அளவில் செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. சாதாரண ஊழியர்களால் இவ்வளவு துணிச்சலாக இந்த காரியத்தை செய்ய முடியாது, மேல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் துணை இல்லாமல் இதுபோன்று நடைபெற வாய்ப்பில்லை என கூறுகிறார்கள். உதாரணமாக, டாஸ்மாக் கடைகளில் உள்ள ஸ்வைப்பிங் மெஷினில் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூட, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாகவே பணம் எடுக்கிறார்கள். அதில், வரும் பில்லில் டாஸ்மாக் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் நேரடியாக அந்த பணம் டாஸ்மாக் நிர்வாகத்திற்குதானே செல்கிறது என்று அர்த்தம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் ஒரு பார்வை!
இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எப்போதும் போல் ஒரு உத்தரவை டாஸ்மக் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தி டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, ரூ.10 அல்லது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்திடவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவும் வழக்கம்போல் சாதாரணமான உத்தரவாகவே இருக்கும், டாஸ்மாக் கடைகளில் எப்போதும் போல் வசூல் வேட்டையில்தான் ஈடுபடப் போகிறார்கள் என மதுப்பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உண்மையாகவே டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கூடுதல் விலை விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால், இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது ஒருபக்கம் இருந்தாலும், கூடுதல் விலைக்கு விற்றால் அதுகுறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்களை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்ட வேண்டும். அப்படி புகார் அளிக்கும் எண் இருந்தால், எந்த கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கிறார்களோ உடனடியாக அவர்கள் மீது அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முடியும். புகாரின் பேரில் டாஸ்மாக் நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்கிறார்கள்.