Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் ஒரு பார்வை!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் என்ன? எத்தனை எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்?
 

A view of the strength of the parties present in the opposition meeting
Author
First Published Jul 18, 2023, 5:16 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பீகார் மாநிலம் பாட்னா கூட்டத்தைத் தொடர்ந்து, பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு (I.N.D.I.A - Indian National Democratic Inclusive Alliance) என இந்திய தேசிய ஜனநாயக ஐக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய ஜனநாயக ஐக்கிய கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலம் என்ன?


1. அகில இந்திய காங்கிரஸ்


இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் மிகப்பெரிய கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 49 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 31 எம்.பி.க்கள் என மொத்தம் 80 எம்.பி.க்கள் உள்ளனர். கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் உள்ளது. பீகார், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.

2. திரிணாமூல் காங்கிரஸ்


மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. மக்களவையில் 23, மாநிலங்களவையில் 12 என திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 35 எம்.பி.க்கள் உள்ளனர். மேகாலயா உட்பட வேறு சில மாநிலங்களிலும் இக்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

3. திராவிட முன்னேற்ற கழகம்


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுகவுக்கு செல்வாக்கு உள்ளது. மக்களவையில் 24, மாநிலங்களவையில் 10 என திமுகவுக்கு மொத்தம் 34 எம்.பி.க்கள் உள்ளனர்.

4. ஆம் ஆத்மி கட்சி


டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மக்களவையில் 1, மாநிலங்களவையில் 10 என ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 11 எம்.பி.க்கள் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் உடன் பல்வேறு முரண்களை கொண்டுள்ளது.

5. ஐக்கிய ஜனதாதளம் கட்சி


பாட்னாவில் முதல் எதிர்க்கட்சி கூட்டத்தை நடத்திய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் 16, மாநிலங்களவையில் 5 என மொத்தம் 21 எம்.பி.க்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதாதளம் முறித்துக் கொண்டதுடன், ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. எனவே, அதன் பலம் மாற வாய்ப்புள்ளது.

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு: அடுத்த கூட்டம் எங்கே?

6. ராஷ்டிரிய ஜனதாதளம்


லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி பீகார் மாநில ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கிறது. லாலு யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அம்மாநில துணை முதல்வராக உள்ளார். ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு மாநிலங்களவையில் மட்டும் 6 எம்.பி.க்கள் உள்ளனர்.

7. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா


ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சிக்கு மக்களவையில் 1, மாநிலங்களவையில் 2 என மொத்தம் 3 எம்.பி.க்கள் உள்ளனர்.

8. தேசியவாத காங்கிரஸ் கட்சி


பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்துக்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் சரத் பவார் ஒரு அணியாகவும், அவரது சகோதரர் மகன் அஜித் பவார் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அஜித் பவார் தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியில் உள்ளார்.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து சரத் பவார் அணி, அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 5 எம்.பி.க்களும், மாநிலங்களவை 4 எம்.பி.க்களும் உள்ளனர். இதில் யார் எந்த அணியில் உள்ளனர் என்பது சந்தேகமே. சரத் பவார் நாட்டின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர்.

9. சிவசேனா உத்தவ் தாக்கரே அணி


பாலாசாகேப் தாக்கரேவால் நிறுவப்பட்ட சிவசேனா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஏராளமான எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கைகோர்த்தனர். கடந்த 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற  தேர்தலுக்குப் பிறகு, அப்போதைய உத்தவ் தாக்கரே தலைமையிலான ஒருங்கிணைந்த சிவசேனா, பாஜகவுடனான தனது உறவைத் துண்டித்து, என்சிபி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை அமைத்தது. சிவசேனாவுக்கு மக்களவையில் 19 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 3 எம்.பி,க்களும் உள்ளனர். இதில் யார் எந்த அணியில் உள்ளனர் என்பது சந்தேகமே.

10. சமாஜ்வாதி கட்சி


மக்களவைக்கு அதிகபட்ச உறுப்பினர்களை அனுப்பும் மாநிலமான உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, அம்மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. மக்களவையில் 3, மாநிலங்களவையில் 3 என மொத்தம் 6 எம்.பி.க்கள் இக்கட்சிக்கு உள்ளனர்.

11. ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி


ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் நிறுவனர் அஜித் சிங்கின் மகனும், முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனுமான ஜெயந்த் சவுத்ரியின் தலைமையில் இக்கட்சி உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த கட்சிக்கு ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயந்த் சவுத்ரி உள்ளார்.

12. அப்னா தளம் (காமராவாடி)


அப்னா தளம் கட்சியின் நிறுவனர் சோனேலால் படேலின் மனைவி கிருஷ்ணா படேல் மற்றும் மகள் பல்லவி பேட் தலைமையிலான அப்னா தளம் பிரிவாக அப்னா தளம் (காமராவாடி) உள்ளது. அப்னா தளம் கட்சியின் காமரேவாடி பிரிவு சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.

அதேசமயம், மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் (சோனேலால்) பிரிவு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. 

13. தேசிய மாநாட்டு கட்சி


ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃப்ரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு மக்களவையில் 3 எம்.பி.க்கள் உள்ளனர். அம்மாநிலத்தில்முக்கிய கட்சியாக தேசிய மாநாட்டு கட்சி உள்ளது. ஃப்ரூக் அப்துல்லா நாட்டின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர்.

14. மக்கள் ஜனநாயக கட்சி


ஜம்மு-காஷ்மீரின் மற்றொரு முக்கிய கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் உள்ளது. மக்களவையில் இதற்கு உறுப்பினர்கள் கிடையாது.

15. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


இடதுசாரிக் குழுவில் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இக்கட்சி ஓரளவு செல்வாக்கைக் கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 3, மாநிலங்களவையில் 5 என மொத்தம் 8 எம்.பி.க்கள் உள்ளனர். 

16. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த கட்சிக்கு மக்களவையில் 2, மாநிலங்களவையில் 2 என மொத்தம் 4 எம்.பி.க்கள் உள்ளனர். 

17. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன்


பீகார் மாநிலத்தில் ஆளும் கட்சிக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் அங்கம் வகிக்கிறது. திபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான அக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

18. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி


இடதுசாரி கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிக்கு கேரளாவில் இருந்து ஒரு மக்களவை உறுப்பினர் உள்ளார். மேற்குவங்கம், திரிபுரா உட்பட வேறு சில மாநிலங்களில் இக்கட்சிக்கான ஆதரவுத் தளம் உள்ளது.

19. அகில இந்திய பார்வர்டு பிளாக்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் நிறுவப்பட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக், கட்சி இப்போது இடதுசாரிக் குழுவின் சிறிய அங்கமாக உள்ளது. இந்த கட்சிக்கு தற்போது பாராளுமன்றத்திலோ அல்லது எந்த மாநில சட்டசபையிலோ பிரதிநிதித்துவம் இல்லை. ஒரு காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய மாநிலங்களில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.

20. மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகம் - மதிமுக


தமிழ்நாட்டை சேர்ந்த வைகோ தலைமையிலான மதிமுக கட்சி, ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ உள்ளார். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர்.

21. விடுதலை சிறுத்தைகள் கட்சி - விசிக


திருமாவளவன் தலைமையிலான விசிக, ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மக்களவை எம்.பி.யாக திருமாவளவன் உள்ளார். விசிகவை சேர்ந்த மற்றொரு மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று விழுப்புரம் எம்.பி.யாக உள்ளார்.

22. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறிப்பாக, கொங்கு பெல்ட்டில் இக்கட்சிக்கு செல்வாக்கி உள்ளது.

23. மனிதநேய மக்கள் கட்சி


பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஜவாஹிருல்லா தற்போது எம்எல்ஏவாகவும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

24. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்


கேரளாவை தளமாகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலமாக கூட்டணியில் பயணிக்கிறது. இந்த கட்சிக்கு மக்களவையில் 3, மாநிலங்களவையில் 1 என மொத்தம் 4 எம்.பி.க்கள் உள்ளனர்.

25. கேரளா காங்கிரஸ் (மணி)


கேரளாவை தளமாகக் கொண்ட இந்த கட்சிக்கு மக்களவையில் 1, மாநிலங்களவையில் 1 என மொத்தம் 2 எம்.பி.க்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இக்கட்சி உள்ளது.

26. கேரள காங்கிரஸ் (ஜோசப்)


கேரளாவை தளமாகக் கொண்ட இந்த கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியில் இணைந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அம்மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், தேசிய அளவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios