Asianet News TamilAsianet News Tamil

நிரப்பப்படாத மின்வாரிய காலி பணியிடங்கள்… மின்சேவை வழங்கும் பணிகளில் மந்தநிலை!!

மின்வாரிய களப்பணியில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மின் சேவை வழங்கும் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

electrical services slowdowns due to unfilled electrician vacancies
Author
First Published Sep 4, 2022, 7:45 PM IST

மின்வாரிய களப்பணியில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மின் சேவை வழங்கும் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை போல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி பொது மக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டது. மின்நுகர்வோரின் மின்சாரம் தொடர்பான அனைத்து விதமான சேவைகளும் மின்வாரிய பிரிவு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. மின் விநியோகம், மின் தடங்கலை சரிசெய்வது, மின் கட்டணம் அளவீடு மற்றும் மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டிப்பு செய்வது,மின் இணைப்பு வழங்குவது மற்றும் மின்மாற்றிகள் அமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை மின்வாரிய பிரிவு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இரவுப்பணி, விடுமுறைநாள் பணி, புயல் மற்றும் மழைக்கால பேரிடர் அவசரப் பணி, திருவிழாப்பணிகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் செய்கின்றனர். இந்த மின் களப்பணிகளை செய்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழக அரசால் வேலைப்பளு ஒப்பந்தம் போடப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? சம்பளம் எவ்வளவு?

மின்நுகர்வோரின் மின்வாரிய பணிகளை பார்க்க வேலைப்பளு ஒப்பந்தப்படி பணியாளர்களை மின் வாரியம் கடந்த பல ஆண்டுகளாக நியமிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய ஜனதா சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.சசாங்கன் கூறுகையில், கடந்த 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் களப்பணியில் உபரிப் பணியாளர்கள் இருந்தனர். பிறகு இந்த நிலை மாறி களப்பணிக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. தற்போது அதுவே நிரந்தரமாக இன்று வரை நீடிக்கிறது. தினந்தோறும் மற்ற பராமரிப்பு பணிகளை விட கூடுதல் முக்கியத்துவம் வழங்கி மின் துண்டிப்பு பணிகளை செய்திட வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க பல நூறு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் மின் துண்டிப்பு செய்திட மிகக் குறைந்த பணியாளர்கள் தான் உள்ளனர். தமிழ் நாடு மின்சார வாரியத்தில் சுமார் 2600 க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒரு பிரிவு அலுவலகத்தில் குறைந்த பட்சம் சராசரியாக ஆறு கம்பியாளர்களும், ஆறு உதவியாளர்களும் சேர்த்து 12 பேர் இருக்க வேண்டும். ஆனால் இருப்பது என்னவோ, இரண்டு அல்லது நான்கு பேர் மட்டுமே. இன்னும் வேதனை தரும் விஷயமாக சில பிரிவுகளில் மேற்பார்வை செய்யும் போர்மேன், லைன் இன்ஸ்பென்டர் தவிர கம்பியாளர், உதவியாளர் யாரும் இல்லாத நிலையும் உள்ளது.

இதையும் படிங்க: சீசன் முடிந்தும் குற்றால அருவிகளில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.. அலைமோதும் மக்கள் கூட்டம்..

சுமார் 30,000 காலியிடங்கள் களப்பிரிவில் உள்ளதால் மின் நுகர்வோர் பணியில் சேவைக் குறைவு ஏற்படுகிறது. பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளில் முக்கியமான மின் தடைப்பணிகளை மேற்கொள்ள தாமதமாவதால் பொதுமக்களை மின்வாரிய ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துவக்கப் பெற்ற பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணைமின் நிலையங்கள் பலவற்றிற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப் படவில்லை. அதனால், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் பிரிவு அலுவலர் முதல் உதவியாளர் வரை அதிகமான வேலைப்பளு மற்றும் போதிய ஓய்வின்றி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். புறப்பணிக்கு சென்றவர்களின் பணிகளையும் இவர்களே பார்ப்பதனாலும் போதிய விடுப்பு மற்றும் ஓய்வு இன்றி பணியாற்றுவதால் மின் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. பல ஆண்டுகளாய் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்தப் பணியாளர்களையும் களப்பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என வாரியம் உத்தரவிட்டிருப்பதால் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கேங் மேன் மற்றும் களப்பணிகளுக்கு புதிய பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக பணியில் நியமித்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தடையின்றி வழங்கிடவும், விபத்தில்லா மின்வாரியத்தை உருவாக்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios